சிறுகதை

Tuesday, November 12, 2013

இதுவும் காதல்

இந்தியாவில் நூறு பெண்களுக்கு நூத்தியெட்டு ஆண்கள் உள்ளார்களாம். அந்த எட்டு பேர் பாவம்..!!! ஏற்கனவே ரேஷியோ கம்மி இதிலும் கொஞ்சம் நல்லா இருந்தாலே டிபார்ட்மெண்டுக்கு பத்து என நூறு பேர் ஒரே பிகர் பின்னால் சுத்துவதால் கணக்கு இன்னும் அடிபட்டு ஏகப்பட்ட ஒரு தலை காதலன்கள்.

என் நண்பர்கள் ஒவ்வொருவரையும் மூன்று பிரிவாக பிரிக்காலாம் என்னையும் சேர்த்து..... ஒன் சைடு, டபுள் சைடு அப்புறம் லவ் பெய்லியர்.
காலேஜ் ஆரம்பத்தில் ஏகப்பட்ட ஓன் சைடு இருந்தார்கள், மூக்கில் விரல் வைக்கும் அளவிற்கு சில டபுள் சைடும் கூட மூன்றாவது கொஞ்சம் கம்மி தான்.... அவர்களுக்கு இன்னும் கொஞ்சம் நேரமும் நம்பிக்கையும் இருந்தன. வருடம் ஓட ஓட கிராப்பில் இரெண்டாம் நபர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போனது ஒருவன் டபுள் சைடு ஆகும் பொழுது குறைந்த பட்சம் பத்து பேர் ஆவது லவ் பெய்லியர் லிஸ்டில் சேர்வது எழுதப்படாத விதி...அதன் விளைவாக மூன்றாவது அணியும் பலமடைந்தது.

டபுள் சைடுகாரனுங்களால அதிகம் தொந்தரவு இருக்காது பெரும்பாலானோர் நம்மை கண்டு கொள்ள மாட்டார்கள் அவ்வப்போது அங்கபோனேன் இங்க போனனேன் fb பிக்ல அஜித் மாதிரியே இருந்தேன்னு சொன்னா என்று கடுப்பேத்துவத்தை தவிர்த்து அதிக இம்சை இருக்காது.

சிங்கள் சைடு, லவ் பேய்லியர் ரெண்டு பேரும் பேசியே சாகடிப்பானுங்க ஒருத்தன் நா இனிமே தண்ணி தம்மே தொட மாட்டேன் சொல்லுவான் இன்னொருத்தன் தண்ணி அடிச்சே தீரனும்பான். ஒரு கட்டத்தில் ரெண்டு பேருமே நம்மை யாரோ ஒரு முகம் தெரியாத கட்டை தொப்பையிடமே அடுத்த டிப்பார்ட்மெண்ட் வாத்தியிடமே அல்லது அந்த பெண்ணிடமே அடி வாங்க வைத்து விடுவார்கள்.

இப்பொழுது இருக்கும் காதல்கள் எல்லாம் சைனா மேட் போல.. ஒரு சின்ன வழியை..சின்ன ஏமாற்றத்தை... சோதனையை அது தாங்குவதில்லை. ஒவ்வொருத்தனின் கதையையும் பக்கம் பக்கமாக எழுதலாம்...... சத்யா கல்லூரியில் அறிமுகம் ஆகி கல்லூரியிலேயே மறைந்து போனவன்.... அவனுக்கும் எனக்கும் எந்ததொடர்பும் இல்லை.... அவன் சோபியா என்ற குட்டையான மைதா மாவு போன்ற கலர் உடைய பெண்ணை காதலித்தான். அருகருகே அமர்ந்து கைகளை தடவிக்கொள்ளாத...செல் போனில் அதிகம் பேசாத..... யாருமில்லா வகுப்புகளில் தனியாக அமர்ந்திராத காதல்... இப்படி எதுவுமே செய்யாமல் கடைசியில் பிரிந்து விட்டதாக தகவல், இதுவும் காதல். இதைவிட பலதும் செய்து பிரிந்ததும் காதல்...... பலருடன் சுற்றி பலருடன் பிரிந்து அமெரிக்காவில் செட்டில் ஆகி இருக்கும் சக்தி செய்தது காதல். எட்டு வருடம் போராடி சம்மதம் வாங்கி கல்யாணம் செய்த பாரதி செய்ததும் காதல்.. பேரன்ட்ஸ் ஒத்துக்கல பிரிஞ்சுடுவோம் என்று கழண்டதும் காதல். ஏகப்பட்ட காதல்.. எங்கேயும் காதல்.

இந்த மூன்று பிரிவிலும் சேராத ஒருவன் இருந்தான்..... மோகன ரங்கன். பெரிய சோடா புட்டி.... ரிப்பேர் ஆனா மெசினில் வெட்ட பட்ட புற்கள் போல சரியாக சவரம் செய்யாத தாடி... பக்கத்தில் போனாலே ஒரு வித முடை நாற்றம். அவனுக்கு அடிக்கடி வலிப்பு வரும்.. அடிக்கடி  என்றால் ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் நான்கு தடவை. வலிப்பு வந்தால் அவன் கைகளை பிடித்து கட்டுபடுத்துவது படு சிரமம்.. ஆள் ஆறு அடி.... நான்கைந்து பேர் வேண்டும். வலிப்பு வரும் போது பேன்டில் மூச்சா போய்விடுவான்... பின் அந்த ஈரத்துடனே அலைவான்.. அருகில் வந்து அமர்வான்.

அவன் பேசுவதும் ஸ்லோ மோஷனில் பேசுவது போல் தான் இருக்கும்."என்ன்ன்ன்ன்னா டாஆஆ....(சில நொடி) கௌவ்வ்வ்வ்தம்....." என்பான். அவனுடன் உரையாடுவதும் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட ரோவருடன் உரையாடுவதும் ஒன்று தான் தகவல் கொடுத்து தகவல் வாங்க 40 நிமிஷம் ஆகி விடும். "என்னடா ரங்கா.... சப்டியா..."
ஒரு நிமிடம் உற்றுப் பார்ப்பான்.... ஹே ஹே என்று சிரிப்பான்.... சரி சிரித்து விட்டு பதில் சொல்லுவான் என்று நினைத்தால் மீண்டும் உற்று பார்ப்பான்... "டேய் தேவையா உனக்கு வா டா.." என்று நண்பன் இழுத்து....போய் விடுவேன். இரண்டு வகுப்புகள் கழித்து அருகில் வந்து அமர்ந்து தீடீர் என்று கிளாசுக்கே கேட்கும் அளவிற்கு கத்தி சொல்லுவான் "மோருஞ் சாதம் சாப்பிட்டேன்.... ஹே  ஹே ..."

அவனுக்கு சொல்லி கொள்ளும் அளவிற்கு நண்பர்கள் கூட்டமும் இல்லை. தனியாக தான் சுற்றுவான். எக்ஸாமிற்கு பேனா கூட எடுத்து வர மாட்டான்... அருகில் அமரும் பெண்களிடம் கேட்காமல் எல்லாத்தையும் எடுத்து அவன் பக்கத்தில் வைத்துக்கொள்வான்.
"ஸ்கேல் வேணும் வேற இல்ல.." என்று அந்தப் பெண் திரும்பி கேட்கும் பொழுது உற்று பார்த்துக்கொண்டே அருகில் போவான். சில பெண்கள் பயந்து எழுந்து விடும்....  சில க்ரீச் என்று கத்தும்.

ஒரு பக்கம் தான் எழுதுவான் அதையும் பிட்ஸ் வரும் பொழுது கிழித்து விடுவான். அவன் இது வரை எந்த எக்ஸாமிலும் கிழிக்காமல் இருந்ததில்லை. அவனுக்கென்று ஒரு உலகம்.. தனி உலகம் செவ்வாய் கிரகம் போல்.. நாம் போய் ஏதாவது தொந்தரவு செய்தால்.. கொஞ்சம் நேரம் எடுத்தாலும் பதில் சொல்லுவான் அவ்வளவுதான் வேறு எதை பற்றியும் அவனுக்கு கவலை இல்லை. உடை அழகு உணவு மதிப்பெண் பெண் வேலை என ஒரு சராசரி ஆண்களின் கவலைகள் அவனுக்கு இல்லை.

ஆனால் இந்த காதல்...?? மிருகங்கள் கூட காதலிக்கின்றன..... எனக்கு தெரிந்து ஒருத்தன் கூட காதலிக்காமல் இல்லை. இவனுக்கு காதல் கூட இருக்காதா என்ன?. என் வகுப்பில் பல நல்ல பிகர் இருந்தார்கள்....  அந்த பெண்களையே கூட சில சமயங்களில் இவன் கத்தவிட்டு இருக்கிறான். இவன் யாரை காதலிக்கிறான் என்ற ஆர்வம் எங்களுக்குள் பல நாட்களாக இருந்தது. எத்தனை நாட்கள் ஆனாலும் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து ஒரு நல்ல நாளில் அவனிடம் கேட்டோம்.

"டேய் ரங்கா எங்க போற....."
"......"
"டேய் என்னடா நெத்தியில காயம்..."
"....."
"வெயிட் பண்ணுடா கேட்டுகிட்டே இருக்காத குழம்பிடுவான்.."
"..."
"கிழ விழு,,ந்து..டேன்டா.. பிட்ஸ்"
"பாத்து போடா... டிட்ச்செல்லாம் தாண்டாத.... பிரிட்ஜ்ல நடந்து வா..."
"....."
"டேய் இந்த பய ஹரி இருக்கான்ல.."
"ஹ.." அவனை பார்த்து சிரித்தான். ஒரு வார்த்தை பதில்கள் சட்டென்று வந்துவிடும்.
"அவன் நம்ம கிளாஸ் சிந்துவ லவ் பண்றானாம்.."
"ஹி..ஹி.." என்று வெட்கப்பட்டான்
"நா யார லவ் பண்ணறேன்னு உனக்கே தெரியும்...."
"யாருன்னு சொல்லுடா.." என்று ஹரி அவனிடம் கேட்டான்
மீண்டும் "ஹி ஹி.."
"சீதா மேம் பேரச் சொல்லிட போறான்.... அதவிடு... நீ யார லவ் பண்ற..?"
உடம்பை அசைத்து பக்கத்தில் முத்தம் குடுப்பது போல் வந்து விட்டான்.
"டேய் டேய் என்னடா பண்ற...?"
"டேய்ய்ய்ய்..... யாருன்னு சொல்ல்ல வந்தேண்டா..." என்றான்
"ஒ சீக்ரெட்.. ஹ்ம்ம் சொல்லு சொல்லு..."
காதில் அவன் மீசை உரசியது.... "யாருமில்லை.."
"லொள்ள பாத்தியா.... இத சொல்ல தான் காதுல குச்சி விட்டு ஆட்டினியா..?"
"ஹே ஹ .." கிளாசே அதிரும்படி சிரித்தான்
"டேய் டேய்..சொல்லுடா ரெங்கா...."
அவன் வெட்கப்பட்டு முதன் முறை பார்த்தோம்....
"சொல்லுடா யாரு தீப்தி தானே.."
"இல்ல்ல்லடா.."
"அப்புறம் யாரு..."
"என் தங்கை.. செண்பா...." என்றானே பார்க்கணும்
இதுவும் காதல் தான்.