சிறுகதை

Saturday, January 25, 2014

பூவெழினி 2

விதிகள் என்பது எப்போது ஏற்படுத்தப்படும். ஒரு விசயத்தை பல நாட்களாக பின்பற்றி அதில் உள்ள நல்ல பண்புகளை (good practices) கண்டு பிடித்து இதை செய்யுங்கள் என்று கூறுவது விதிகள். இப்படி நாடு, ஒற்றறிதல், சான்றாண்மை, சூது ,அமைச்சு போன்ற அதிகாரங்களின் பத்து பத்தாய் 1330 நற்பண்பு விதிகளினை கூறும் திருக்குறள், அது எழுதப்பட்ட காலத்திற்கு பல காலம் முன்பே தமிழர்கள் அரசாங்கம், பொருளாதாரம், வணிகம், கல்வி போன்றவற்றில் முழு வளர்ச்சி பெற்று விட்டார்கள் என்பதை தெளிவாக எடுத்துரைக்கிறது. திருக்குறளின் காலம் கி.பி. 31 என்று வரையறுக்கப்பட்ட போதிலும், அது அதற்கும் முற்ப்பட்டது என்பது என் உள்ளுணர்வு.
இனி....

2. வேளை வந்து விட்டது

"பெருமலை ஒருபுறத்தே திருமலை மறுபுறத்தே
பெருங்கடல் ஒருபுறத்தே இருங்கடல் மறுபுறத்தே
திருவுறச் சூழ்ந்த தாலே செழுவளம் கெழுமிச்சூழ
ஒருபெரும் கண்ணிநாடு குமரிநா டெனஉரைத்தார்"



ஏழ்தெங்க நாடும், ஏழ்மதுரை நாடும், ஏழ்குணகாரை நாடும், ஏழ்முன்பாலை நாடும், ஏழ்பின்பாலை நாடும், ஏழ்குன்றநாடும், ஏழ்குறும்பனை நாடும் என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும் கொண்ட பெரும் ரஜ்ஜியாமான பாண்டிய நாட்டின் ஒப்பற்ற தலைநகராய் திகழ்ந்தது பக்றுளி ஆற்றங்கரையில் அமைந்திருந்த தென் மதுரை. அறமும் மறமும் தவறாது கட்டிகாத்து நீதி நெறியுடன் ஐபெருங்குழுவுடன் நாட்டை ஆண்டு வந்தான் மாமன்னன் மிஞிழி. திரை கடலோடி திரவியம் சேர்த்த வணிகர்களால் முத்தும் மணியும், வைரமும் வைடூரியமும் குப்பல் குப்பலாக குவிந்து கிடந்ததன. மேரு மலையின் காகம் கூட தங்கம் தான் என்று கூறும் அளவிற்கு தங்க சுரங்கள் குவிந்த முத்தூரில் இருந்து வந்த தங்கம் மதுரையின் மாட்டு வண்டிகளை கூட அலங்கரித்தது. 

 உள்நாட்டில் இருந்து வந்த விவசாயம் செய்யும் மருத நிலத்து மக்கள் மிளகு, கம்பு, சோளம், பருப்பு வகைகள்,கம்பு, ராகி, கரும்பு ஆகிவற்றை பண்ட மாற்றம் செய்து மணிகளையும், பட்டாடைகளையும் பெற்று சென்றனர்.கொல்லர், உழவர், தச்சர், நெசவாளிகள், மருத்துவர்கள், பெரும் வணிகர்கள் போன்ற பலர் வசிக்கும் மாபெரும் நகரமாய் விளங்கியது மதுரை. அதற்கு மேற்க்கே நூற்றி முபத்தி எட்டு காதமும் தெற்கே  என்பது காதமும் விரிந்திருந்த பெரும் நாடாய் விளங்கியது பண்டைய பாண்டிய நாடு. (ஒரு காதம் = 16 KM என்று கொள்க)

ஆலமரத்தை தாங்கும் ஆணி வேராய் மன்னனும் அமைச்சர்களும் இருந்தார்கள். ஏழேழ் நாடுகளில் இருந்த சிற்றசர்களும் அவர்களது யானை படையும், குதிரை படையும், காலால் படையும் ஆலம் விழுதுகளாய் அரசை தாங்கி நின்றது. அணைத்து விழுதுகளும் மண்ணில் புதைந்து மரத்திற்கு வழு ஊட்டுவதில்லை, சின்ன தென்றலில் கூட பல விழுதுகள் ஆடிவிடும்.


மண்ணுக்கு அடியில் பிறர் கண்ணுக்கு புலப்படாமல் தொலை தூரம் கடும் பாறைகளில் கூட பரவி நீரை தருவிக்கும் ஆணிவேரில் இருந்து கிளம்பு துணை வேறுகளாய் இருப்போரை நம்பித்தான் மாபெரும் நாடே உள்ளது. அவர்களுள் ஒருவர் தான் ராபதேஸ்வரர். அவர் எங்கிருந்து வந்தார், எப்படி வந்தார், அவர் வயது என்ன யாருக்கும் ஒன்றும் தெரியாது. அவரது கதை மர்மமும், அதிசயங்களும் நிறைந்தவை, நம்ப முடியாதவை. சிலர் இவரை சாக வரம் பெற்ற சித்தர் என்பார்கள், சிலர் இவரை மாயா மந்திரம் தெரிந்த சூனியவாதி என்பார்கள், இவருக்கு தெரியாமல் நாட்டில் எதுவும் நடந்துவிடாது என்று அனைவரின் நம்பிக்கை. எது என்னவோ எனக்கு தெரிந்து இவர் நம் அரசன் மிஞிழிக்கு உயிர் காத்த இறைவன் அதனால் அவன் நம்பிக்கைக்கு உரியவர். அந்த கதை பின்னே.


நாட்டின் இத்தனை முக்கிய நபர் இருப்பது அலைகடல் நீர் தெளித்து விளையாடும் மதுரையின் கோட்டைக்கு நடுவில் உள்ள மாட மாளிகையில் அல்ல. மேகமலையில் அமைதி சூழ் கானகத்துக்கு நடுவே மயில்கள் அமர்ந்து தோகை விரித்து விளையாடும்  சின்ன குடிலில். அதுவும் இப்போது அவர் அங்கு இல்லை, பின்னே? குன்று ஒன்று இடிந்து விழுந்ததே அதன் மேலிருந்து சிறுத்தையுடன் நின்று கொண்டிருந்த நன்னனை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார்.



குடுமியற்ற தலையிலே வேப்பந்தளிரும், உழிஞைப்  பூவும் கொடியோடு அணிந்து வந்த அவரின் வயதை கணித்து சொல்வது கடினம் தான். நின்னனுக்கு ஒத்த வயதுடையவர் போல் இருந்தார். அவரை கண்டதும் நால்வரும் வணக்கம் செலுத்தினர். 

நாட்டில் செய்தி பரிமாற்றம் என்பது அன்று முதல் இன்று வரை முக்கியமானதாகவும், ஆட்சியே மாற்ற கூடியதாகவும் விளங்குகிறது. "நான் நலம்.. நீ நலமா..உன்னை காணமல் கண் வாடுதே " போன்ற காதல் கடிதங்களையும் புறா மூலமாக அனுப்பாலாம் வேறொரு பெண்ணின் கையில் கிடைத்தாலும் குற்றம் இல்லை, கொஞ்சம் முக்கிய செய்திகளை ஆள் அனுப்பி தெரிவிக்கலாம், அவசர செய்தியா.... குதிரையில் அனுப்பலாம். முக்கிய ராஜாங்க செய்திகளை அனுப்ப நம்ப தகுந்த ஆள் வேண்டும். இது போன்ற முக்கிய செய்திகளை எடுத்துச் செல்வோருக்கு ஏற்படும் இன்னல்களும் அபாயாயங்களும் எண்ணற்றவை. அதனால் தான் இது போன்ற முக்கிய செய்திகளை பரிமாற்ற இந்த நால் வரை தேர்ந்தெடுத்து குதிரை ஏறவும், வாள் சுழற்றவும், அம்பு எய்யவும், குதிரை இன்றி தனியாக மாட்டிக்கொண்டால் அடர்ந்த காட்டிலும் கூட சிறுத்தையை விட வேகமாவும் லாவகமாகும் ஓட பயற்சி அளித்துள்ளார் ராபதேஸ்வரர். அவர்களின் வளர்ச்சி அவருக்கு பெருமிதத்தையே தந்தது. இவர்களை போல இன்னும் பலர் குதிரை விற்பவர்களாகவும், கொல்லர்களாகவும் பல வேடங்களில் பல இடங்களில் இருக்கிறார்கள். 

  "நீ இளையவன் அல்லன்.. இணை அற்ற வீரன்.." அவர் வாயில் வந்த முதல் வாழ்த்து..... நின்னனின் முகத்தில் புன்னகை பூத்தது.

அவர் முன்னே குடிலை நோக்கி செல்ல நால்வரும் அவரை பின் தொடர்ந்து சென்றனர். சட்டென திரும்பி 

"நின்னன், உதயன், புங்கன், நல்லி உங்களுக்கு வேளை வந்துவிட்டது....."

அனைவருக்கும் சந்தோசம்.... இத்தனை வருடங்களாக பெற்ற பயிற்சியை பிரயோகப்படுத்தும் நாள்.. இந்த நாளுக்கு தானே இத்தனை நாட்கள் தவங் கிடந்தோம்.... என்று எண்ணி நின்னன் பேருவகை கொண்டான். 

தானும் பாராட்டு பெற "பயிற்சி முடிந்து விட்டதா.... தேர்ச்சி அடைந்து விட்டோமா.." ஆர்வமுடன் கேட்டான் நல்லி.

"இல்லை.... செல்வதற்கானா வேளை வந்துவிட்டது...." அதற்கு மேல் அவன் ஒன்றும் கேட்கவில்லை.

அவர்களிடம் வித்தியாச வேலைப்பாடணிந்த பவள முத்திரை ஒன்றை கொடுத்தார்...
"நீங்கள் ஒற்றர்கள்.... மக்களோடு மக்களாக இணைந்து நீங்கள் வாழ வேண்டும்.. உதயா நீ மதுரைக்கு போ.... புங்கா நீ கபடாபுரத்துக்கு செல்.....  நல்லி நீ கடல் கடந்து பெருவள நாட்டிற்கு செல்.....நின்னா நீ  நாகர் படையில் சென்று சேர்... இப்பொழுதே கிளம்பவும்...."

என்று கூறி நடையை தொடர்ந்தார்.... மூவருக்குமே அதிர்ச்சி..... உதயா கேட்டான் " மன்னிக்கவும்.... எங்களுக்கு என்ன வேலை என்று சொல்லவில்லையே...."

"வேலை காத்திருக்கிறது.... போங்கள் புரியும்.... முத்திரை பத்திரம்...."

அவர்களுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை போகின்ற இடத்தில் வேலை இல்லை போகிற வழியில் தான் வேலை என்று...!!! 


No comments: