தடதடவென்று வந்து நின்றது மின்சார ரயில்... அவசரமாக ஏறி இறங்கும் மக்கள்.....எதிரொலியாய் எழுந்த இரைச்சல் ரயில் கிளம்பிய தடதடபுடன் கரைய மீண்டும் அமைதி... சிலர் மட்டும் மெதுவாய் நகர்ந்து சென்று கொண்டிருந்தார்கள்.... போனில் சிலர் உரையாடி கொண்டிருந்தார்கள்.... சப்வேயில் போகும் போது சில பள்ளி மாணவர்கள் கத்தியது அந்த மாலை பொழுதில் ஏதுவாக அமைந்திருக்கவில்லை.. இருள் கவிய தொடங்கிய நேரம்.... ஸ்டேஷன் மீண்டும் வெறிச்சோட ஒருவன் மட்டும் அமர்திருந்தான்.... தண்டவாளத்தின் எதிர்பக்கம் திரும்பி.. மேலிருந்த ஆஸ்பெஸ்டஸ் கூரையை
தாங்கி நின்றதூணை வெறிச்சென்று பார்த்து கொண்டே.... பக்கத்தில் சென்றால் தூரத்தில் இருந்த சிகப்பு விளக்கை அவனது கண்ணீர் பிரதிபலித்து...கன்னத்தின் வழியே உருண்டு தாடியில் ஐக்கியமானது....
தூணில் ஹார்டின் போட்டு..... உள்ளே உமேஷ்..மேகனா ...!!!
"உமேஷ் ஏன் இப்படி பப்ளிக் பிளேஸ்யெல்லாம் எழுதுற...?" என்று அவள் கேட்டது கிணற்றிற்குள் இருந்து கேட்டது அவனுக்கு....
"இது என்ன பப்ளிக் பிளேஸா உனக்கு... இது தான் நமக்கு காதல் கற்று தந்த இடம்.. அலும்னி பேரு எழுதலனா எப்படி.... அங்க பாரு சாய் நிஷா ... நமக்கு முன்னாடி பாஸ் அவுட் போல....."
அவள் சிரித்தது மிக அருகில் கேட்டது....
"அப்படி எல்லாரும் இங்க பேரு எழுதிருந்த ஸ்டேஷனே பத்திருக்காது... அதுவும் நம்மள மாறி வாரா வாரம் இப்படி தவறாம வந்தா ஸ்டேஷன் மெரினா பீச் மாறி எப்போதும் ஜெ ஜெ னு இருந்திருக்கும்...."
கொலுசு சத்தம் கேட்டு பின்னால் திரும்பி பார்த்தான்... அவனை பார்த்து சிரித்து கொண்டே அவள் வந்தாள்... கல்யாணத்தில் போட்டிருந்த அதே புடவை... தாலி கட்டியவுடன் ஒரு சிரிப்பு சிரித்து ஓடி வந்து கட்டியானைத்தாலே அதுபோல ... ஓடினான் கட்டியணைக்கும் பொழுது அவள் இல்லாமல் கிழே விழுந்தான்... சில்லரைகள் சிதறியது.... அவன் கையிலிருந்த ரோஜாக்களுடன்....!!!
"என்னப்பா உனக்கும் கண் தெரியாதா....எத்தன தடவ விழுவ.....?!"
அழுக்கு சட்டை அணிந்து... கலைந்த முடியுடன்..... கண்களில் கண்ணாடி போடாத கண்தெரியாதவர்....
"எங்க போகணும்.. சப்வே கிராஸ் பண்ணனும்னா.. நா வேணா ஹெல்ப் பண்ணறேன்......"
அவன் பதில் சொல்லவில்லை... அமைதியாய் போய் அதே இடத்தில் அமர்ந்தான்....இருட்டி இருந்தது.......அவர்கள் காதல் சற்று மங்கலாய் தெரிந்தது....!!!
பக்கத்திலிருந்த கல்லை எடுத்து எழுதினான் ....
"நீ இல்லாத நாட்களை நான் வாழ்வதில்லை....!!!"
மறுபடியும் தடதடப்பு..... இரைச்சல்... அமைதி....!!!
உலகம் நிற்காமல்... அவசர அவசரமாய் இயங்கி கொண்டிருந்தது......!!!
அவன் உலகம் வாழ்வதில்லை என்னும் வார்த்தைக்கு அடுத்து உள்ள புள்ளியில் நின்றுவிட்டது....!!!
பாட்மிட்டன் ஆடி முடித்து ஓரமாக அமர்ந்த சமயம்....அவள் அவனுக்காக காத்திருந்தாள்....என்ன என்பது போல் பார்த்தான்....
அவளது விழிகளில் நீர்....
"அப்பாவை பார்த்தேன்....."
அவன் தோளில் சாய்ந்து அழுதாள்.......!!!!
என்ன நடந்திருக்கும் என்பது அவனுக்கு தெரியும்... அவளது முகத்தை தூக்கி.... "இதுக்கு ஒரு முடிவு கட்டி ஆகனும் மேக்.."
"ஹ்ம்ம்ம்ம்....." என்று குழந்தையாய் சொன்னாள்
"வா சீக்ரம் குழந்த பெத்துப்போம்...."
"ச்சீ... உன்னைய...அடி வாங்கபோற பாரு.....இந்தா..இந்தா.. " மீண்டும் மீண்டும் வலிக்காத போல்.... மீண்டும் மீண்டும் அடித்தாள்....!!!
ஓவென்று கதறி அழஆரம்பித்தான்.... அவன் அமர்திருந்த பெஞ்சில் இருந்து கிழே சரிந்து விழுந்து....அழுதான்....
"ஏ.. என்னப்பா ஆச்சு சாமீ.... யாருப்பா அது....?!"
தடவி தடவி தரையில் அமர்திருந்த அந்த கிழவர் எழுந்தார்.....
சத்தம் வந்த திக்கை நோக்கி நடக்க.. அவன் கிழே தட்டுப்பட்டான்......!!!
அவனை எடுத்து..மடியில் வைத்து.... அந்த அழுக்கான கரங்களில் வாயில் ஒழுகிய எச்சிலை துடைத்தார்.....!!! ட்ரைன்னுக்கு காத்திருந்த சிலர் வேடிக்கை பார்த்தனர்...!!!
அவன் கதறி அழுதுகொண்டே இருந்தான்.....அந்த சத்தம் மீண்டும் வந்த ட்ரைன் ... மனித இரைச்சலில் காணாமற்போய்... மீண்டும் அவனது அழுதழுது களைத்த தேம்பலாய் வெளிப்பட்டது.....!!!
கல்லூரி மாணவர்கள் சிலர் மிக சத்தமாய் கத்திகொண்டே இருபதையெல்லம் உதைத்து கொண்டு ஓடினார்கள்....சப்வேயில் அவர்களிட்ட சத்தம் நாராசமாய் எதிரோளித்தது...!!!
அவளுடன் வேலை பார்க்கும் கண்ணன் கால் செய்தான்...
"சீக்கரம் வாங்க உமேஷ்.... மேக்னாவுக்கு சின்ன அக்சிடெண்ட்...."
அவள் மேல் துரும்பு விழுந்தாலே தாங்காது அவனுக்கு....
பதறி அடித்து ஓடினான்....
வாசலில் அவன் நண்பர்கள் சோக முகத்துடன் நிற்க....இத்தனை நாள் வராத அவளது பெற்றோரும் வந்திருந்தனர்....
"என்னாச்சு மாமா ........என்னாச்சு... ஐயோ என்னாச்சு...யாராவது சொல்லுங்க....."
"யாரு இவருதா ஹஸ்பண்டா....?"
"இதுல ஒரு கையெழுத்து போடுங்க...."
"என்னாச்சு டாக்டர்....."
அவளது நண்பர்கள் சொல்ல தயங்கியதை....அவளது அப்பா கண்ணீராய் சொன்னதை.... வேலை நடிப்பு சோகத்துடன் சொன்னார் டாக்டர்...
"ஷி இஸ் நோ மோர்...."
உலகம் சுழன்றது.... இருள் கவ்வியது... அப்படியே சரிந்தான் உமேஷ்.....!!!
முகத்தில் தண்ணீர் தெளிக்கப்பட்டது..... விழித்து பார்த்தால் தாத்தா....
எழுந்து அமர்ந்தான்......
"என்னப்பா.. என்ன ஆச்சு உனக்கு.... லவ் புட்டுகிச்சா...."
"அவளுக்கு ஒன்னும் ஆகல....அவளுக்கு ஒன்னும் ஆகல....அவளுக்கு ஒன்னும் ஆகல...." ஈன குரலில் மீண்டும் மீண்டும் சொன்னான்....
அவனால் உட்கார முடியவில்லை அவரது மடியில் மீண்டும் சாய்ந்தான்... கண்களில் நீர் பெருக்கெடுத்து.... முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை.... அவரும் எந்த கேள்வியும் பிறகு கேட்கவில்லை.. "ஒண்ணுமில்ல..ஒண்ணுமில்ல...எல்ல சரியாயிடும்....ஒண்ணுமில்ல ராசா...."
அவனது.. தலையை தடவி கொடுத்தார்.....!!!
அவனை எழுந்து தூணில் சார்த்தி அமரவைத்தார்... அவரது பாட்டிலை திறந்து... வாயில் தண்ணீர் ஊற்றினார்.....!!!
"உனக்கு என்ன ஆச்சுன்னு எனக்கு தெரியல..... ஆனா என்ன ஆனாலும் அது மறஞ்சு புடும் .. கவலைபடதா..... சின்ன வயசு புள்ள மாறி தெரியுற.... இந்த வயசுல அப்படி என்ன கவல உனக்கு..... பேசுப்பா ....."
அவன் அவரையே வெறிச்சென்று பார்த்தான்......
"நாம நமக்கு கிடக்கிறது நேரந்தரம்னு நெஞ்சிடுறோம்..... ஏதுவ இருந்தாலும் நிரந்தரம் இல்ல.... ஏன் இந்த உலகமே நிரந்தரம் இல்லப்பா...... எனக்கு 20 வயசு வரைக்கும் கண்ணு தெரிஞ்சுச்சு..... திடிர்னு ஒன்னும் இல்ல.. என்னமோ கண்ணுல பட்டுச்சுனாங்க.. ஒரு வாரத்துல சரியாயிடும்னாங்க....30 வருஷம் ஆச்சு.... இன்னும் சரியால.. அது வரைக்கும் நா வாழ்ந்து என்ன பண்ணேன்னு...எனக்கே தெரியாது.... ஆனா அதுக்கப்புறம் உலகத்த புரிஞ்சுகிட்டேன்... இப்பயும் அந்த வலியோட தா வாழறேன்.... ஆனா உலகத்த புரிஞ்சுகிட்டு வாழறேன்..... "
"ஏ உலகமே அவ தா தாத்தா.. நேத்து வரைக்கும் என்கூட தான்... உயிரோட.. உயிரா... எ வாழ்கையில உறைஞ்சு போய் இருந்தா...அந்த கடவுள் @#$%@@$ பய.... எ வாழ்கையே அர்த்தமில்லாம ஆக்கிட்டான்....."
அவர் சிரித்தார்...
"இன்னுமா புரியல உனக்கு.... வாழ்கைங்கரதே அர்த்தமில்லாது தான்.... நாமளா அதுல ஏதாவது அர்தத்த திணிச்சுட்டு நம்மள நாமளே ஏமாதிகிறோம் .. ஒரு நாள் அது இல்லன்னு தெரிஞ்சோன... அதையும் ஒதுக்காம.. மறுபடி மறுபடி ஏமாதிகிறோம்... நீ அழுத்தப்ப ஒருத்தனும் நிக்காம ஓடுனாய்ங்களே.. எங்க...எது வரைக்கும் ஓடுவாய்ங்க... ??? புரியரவரைக்கும்... ஒரு நாள் டப்புன்னு மண்டையில தட்டி.. கடவுள் நிஜ வாழ்க்கைக்கு தள்ளுவாரு....அதுக்கப்புறம் நிப்பாங்க.... உண்மைய ஏத்துக்குவாங்க... அதுவரைக்கும் எனக்கு என்ன போச்சுன்னு கைய கட்டி வேடிக்கை தான் பாப்பங்க...."
"தாத்தா போ தாத்தா .. போ...."
"30 வருஷமா தனியவே உட்காந்து யோசித்தது.... நீயும் 30 வருஷத்த கழிச்சிடபோரியோனு தா சொன்னேன்...ஏற்கனவே லேட்டு... வாய்கா ஓரம் டாக்ஸி நிக்காது.... ரோடு கிராஸ் பண்ணி உடுற தம்பி இந்நேரம் போயிருப்பன்...எப்படி போக போறேனோ..."
சொல்லி கொண்டே எழுந்தார்..... அவரது சாமான்களை எல்லாம் சேகரித்து... மெதுவாய் நகர்ந்தார்....
அவருக்கு உதவலாம் என்று உமெஷிர்க்கு தோன்றியது... இருந்தும் அவனது கவலை மேக்னா.. அதை தடுத்தது....
"பாத்து போங்க இருட்டுடிச்சு...." என்றான்
அவர் சிரித்து ..."உனக்கு 30 வருஷத்துக்கு மேல ஆகும்...." என்று நடையை தொடர்ந்தார்...
சப்வே கதவை அந்த கல்லூரி மாணவர்கள் சாத்தி விட்டு சென்று விட்டார்கள் போலும்... அவர் அதை திறக்க முயன்று தோற்றுப்போனார்... அவன் அவரை வெறிச்சென்று பார்த்துகொண்டிருந்தான்... உதவவில்லை....மீண்டும் மேக்னாவில் முழ்கினான்...அவளது பிறந்தநாள் அன்று அவர்கள் சேர்ந்து எடுத்த போட்டோ....தலையில் பிரின்சஸ் கிரீடம்.... முகத்தில் லேசாய் அப்பிய ப்ளாக் பொரெச்ட் .... கன்னத்தோடு கன்னம் வைத்து... எவ்வளவு சிரிப்பு..... சிலர் அலறியது கேட்டு திகைத்து பார்த்தான்... தாத்தா தண்டவாளத்தின் நடுவே... ட்ரைன் வேகமாக முன்னேறி கொண்டிருந்தது...
"யோவ் ட்ரைன்.. ட்ரைன்..."
"போச்சு.. போச்சு..."
அவர்கள் கத்துவதை கேட்டு வேக வேகமாய் தடுமாறி அடுத்த தண்டவாளத்தில் போய் விழுந்தார்... அதில் தான் ட்ரைன் வந்துகொண்டிருந்தது..... உமெஷிர்க்கு...உலகமே இருண்டுவிட்டிருந்தது...ட்ரைன் பிரக் போடும் க்ரீச் சத்தம்.. பலரது கூக்குரல்கள்..... தடுமாறி நின்றது ரயில்...... வாரி சுருட்டி எழுந்து ஓடினான்...
"போயுடுச்சுனு நெனக்கிறேன்..." என்று கூறிய சொட்டைகளை தாண்டி....
நெனச்சிருந்தா காப்பாத்தி இருக்கலாம்.... நாம் தான் சென்று போன கவலையை நினைத்து... மனது சுருக்கென்று வலித்தது அவனுக்கு...
ட்ரைனுக்குள் ஏறி அந்த பக்கம் குதித்து...விழுந்து..எழுந்து...ஓடி சுற்றி இருந்த கும்பலை தள்ளி பார்த்தான்.... தாத்தா சாக்கடை போல் இருந்த ஒரு பள்ளத்தில் கிடந்தார்...
"இருக்கானு பாருங்கப்பா...."
ஒருவர் ஒரு குச்சியை எடுத்து குத்தி பார்த்தார்....
"ஹா...." என்று பதில் தந்தார் தாத்தா.....
அந்த சத்தம் அவனை நிஜ வாழ்கைக்கு டப்பென்று மண்டையில் தட்டி தள்ளியது.....சுற்றி பலர் வேடிக்கை பார்க்க..... அவன் ஓடி அவரை தூக்கி.... அவர் மீது வழிந்த நாற்றம் மிகுந்த அந்த ஈரத்தை தொடைத்து.... அவரை உடகரவைத்து கட்டி பிடித்து...அழுதான்.....
"என்ன மனிசுடுங்க...."
"பரவைல்லையே புரிஞ்சுகிட்ட...." என்றார் தாத்தா.